பத்தாம் வகுப்பு அறிவியல் செய்முறைத் தேர்வுக்கான வினாக்களை மாணவர்களே குலுக்கல் முறையில் தேர்வு செய்யலாம் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.
அறிவியல் பாடத்தில் மொத்தம் 16 வகையான செய்முறைகள் உள்ளன. இந்த செய்முறைகள் தொடர்பான வினாக்களைப் பள்ளிகளிலேயே தயாரிக்கவும், அவற்றில் ஏதேனும் ஒரு வினாவை குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கவும் மாணவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இந்த செய்முறைத் தேர்வுகளை அந்தந்த பள்ளி ஆசிரியர்களின் மேற்பார்வையிலேயே நடத்தி, மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு மதிப்பெண் பட்டியலை அனுப்ப வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
பிளஸ் 2 செய்முறைத் தேர்வுக்கான வினாப் பட்டியலை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் தயாரித்து வழங்குவார். மாணவர்களின் பதிவெண் அடிப்படையில் அவர்களுக்கு வினாக்கள் வழங்கப்படும். பிளஸ் 2 செய்முறைத் தேர்வுகளுக்கு வேறு பள்ளிகளின் ஆசிரியர்கள் தேர்வாளர்களாக இருப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
பொதுப்பாடத்திட்டத்தின் படி, பத்தாம் வகுப்பில் அனைத்து மாணவர்களுக்கும் அறிவியல் பாடத்தில் செய்முறைத் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அறிவியல் பாடத்தில் மொத்தம் 100 மதிப்பெண்ணில் எழுத்துத் தேர்வுக்கு 75 மதிப்பெண்ணும், செய்முறைத் தேர்வுக்கு 25 மதிப்பெண்ணும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இதில் எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற குறைந்தபட்சம் 20 மதிப்பெண்ணும், செய்முறைத் தேர்வில் தேர்ச்சி பெற குறைந்தபட்சம் 15 மதிப்பெண்ணும் பெற வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ஆண்டு பத்தாம் வகுப்புத் தேர்வை சுமார் 10.75 லட்சம் மாணவர்கள் எழுதுகின்றனர். மார்ச் 19 முதல் 29 வரை நடைபெறவுள்ள செய்முறைத் தேர்வு தொடர்பாக அரசுத் தேர்வுகள் இயக்ககம் சார்பில் மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.
அதன் விவரம்:
பத்தாம் வகுப்பு அறிவியல் பாட செய்முறைத் தேர்வை மொத்தம் இரண்டரை மணி நேரம் நடத்த வேண்டும்.
இதில் இயல் அறிவியல் பாடத்துக்கு ஒன்றேகால் மணி நேரமும், உயிர் அறிவியல் பாடத்துக்கு ஒன்றேகால் மணி நேரமும் தேர்வு நடத்த வேண்டும். காலை 9 மணி முதல் நண்பகல் 12 மணி வரையிலும், பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரையிலும் இரு வேளைகளிலும் செய்முறைத் தேர்வுகளை நடத்த வேண்டும்.
செய்முறைத் தேர்வு (மொத்தம் 25 மதிப்பெண்):
இயல் அறிவியல்: இயற்பியல் (ஒரு வினா) - 5 மதிப்பெண், வேதியியல் (ஒரு வினா) - 5 மதிப்பெண்
உயிர் அறிவியல்: தாவரவியல் (ஒரு வினா) - 5 மதிப்பெண், விலங்கியல் (ஒரு வினா) - 5 மதிப்பெண்
அகமதிப்பீடு: மாணவர்களின் ஆய்வுக்கூட வருகை மதிப்பெண் - 1 ,
மாணவர் ஆய்வக செயல் திறன்
மதிப்பெண் - 1 , மாணவர் ஆய்வக ஈடுபாடு மதிப்பெண் - 1 , ஆய்வக பதிவுக் குறிப்பேடு மதிப்பெண் - 2
மொத்த மதிப்பெண் -25
தலைமைக் கண்காணிப்பாளர்: செய்முறைத் தேர்வு நடத்தப்படும் பள்ளியின் தலைமை ஆசிரியர் அல்லது முதல்வர் அந்த செய்முறைத் தேர்வு மையத்தின் தலைமைக் கண்காணிப்பாளராக செயல்பட வேண்டும். செய்முறைத் தேர்வுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் இவர் மேற்கொள்ள வேண்டும்.
செய்முறைத் தேர்வு கால அட்டவணையை தலைமைக் கண்காணிப்பாளர்களே தனிக் கவனம் செலுத்தி தயாரிக்க வேண்டும். செய்முறைத் தேர்வு முடிந்த பிறகு மதிப்பெண் பட்டியல்களை மாவட்டக் கல்வி அலுவலரிடம் ஒப்படைக்க வேண்டும். விடைத்தாள்கள், வினாக்கள் பட்டியலையும் மாவட்டக் கல்வி அலுவலரிடம் ஒப்படைக்க வேண்டும்.
செய்முறைத் தேர்வுக்கு வராதவர்களின் பதிவெண்களைப் பாட வாரியாகக் குறிப்பிட்டு, அரசுத் தேர்வுகள் (இணை இயக்குநர்), சென்னை -600006 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். செய்முறைத் தேர்வை எந்தவிதப் புகாருக்கும் இடமின்றி நடத்துவது மாவட்டக் கல்வி அலுவலரின் பொறுப்பாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2 comments:
Test
மாணவர்களுக்கு பயனுள்ள தகவல் !
Post a Comment