கடந்த கல்வியாண்டில் 1 ம் வகுப்பு மற்றும் 6ம் வகுப்புகளுக்கு அறிமுகம் செய்யப்பட்ட சமச்சீர் கல்வியை இந்த கல்வி ஆண்டில் அனைத்து வகுப்புகளுக்கும் (1 முதல் 10 வரை ) நடைமுறைப்படுத்தப் பட்டது. ஆனால் ஆளும் ஆதிமுக அரசு சமச்சீர் கல்வி வேண்டாம் என நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது. இதனால் ஜுன் மாதம் பள்ளிகள் துவங்கியும் ஆகஸ்ட் மாதம் வரை மாணவ,மாணவியருக்கு எந்தக் கல்வி முறை என்று தெரியாமல், இறுதியில் சமச்சீர் கல்வி என்றே முடிவானது.
சமச்சீர் கல்வியை இந்த கல்வியாண்டிலேயே தொடர வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து ஆகஸ்ட் மாதத்தில் மாணவ, மாணவிகளுக்கு சமச்சீர் கல்வி பாடப் புத்தகங்கள் வழங்கப்பட்டன.
எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகம் மருத்துவ மாணவர்களின் தேர்வுகலீல் சில மாற்றங்களை கொண்டு வந்தது. இரண்டு பாடப்பிரிவுகளைக் கொண்ட ஒரு தாளில் 100 மதிப்பெண் பெற்றால் தேர்ச்சி என இருந்ததை மாற்றி ஒவ்வொரு பாடப்பிரிவிலும் தலா 50 மதிப்பெண்கள் எடுத்தால்தான் தேர்ச்சி என்று அறிவிக்கப்பட்டது.
இதனால் தேர்ச்சி விகிதம் குறைந்து ஏராளமான மாணவர்கள் தோல்வி அடைந்தனர். தோல்வியடைந்த மாணவர்கள் வழக்குத் தொடர்ந்து, வழக்கின் விசாரணை நடந்து கொண்டிருக்கும் போதே, தமிழக அரசு தலையிட்டு பழைய தேர்வு முறையையே பின்பற்ற வேண்டும் என்று எம்.ஜி.ஆர். பல்கலையைக் கேட்டுக் கொண்டதன் பேரில் இந்த பிரச்சினை முடிவுக்கு வந்தது.
பி.எட். முடித்தவர்கள் ஆசிரியர் தகுதித் தேர்விலும் தேர்ச்சி பெற்றால்தான் அரசு பள்ளிகளில் நியமனம் செய்யும் முறையை தமிழக அரசு கொண்டு வந்தது. இதனால் பி.எட். முடித்துள்ள பலரும் அதிருப்திக்குள்ளாகியுள்ளனர்.
தமிழகத்தில் உள்ள 5 அண்ணா பல்கலைக்கழகங்களையும் ஒன்றாக இணைத்து சென்னையில் ஒரே அண்ணா பல்கலைக்கழகமாக செயல்படும் வகையில் ஒருங்கிணைக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்த கல்வியாண்டில் இருந்து 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு புகைப்படத்துடன் கூடிய மதிப்பெண் பட்டியல் வழங்க கல்வித் துறை திட்டமிட்டு அதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது. மேலும், தேர்வு அறை வருகைப் பதிவேட்டிலும் மாணவர்களின் புகைப்படம் இடம்பெறுகிறது. போலி மதிப்பெண் பட்டியல்களை தடுக்கும் வகையிலும், தேர்வில் ஆள்மாறாட்டம் செய்வதைத் தடுக்கவும் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
இந்த கல்வியாண்டில் அண்ணா பல்கலை மூலம் நடத்தப்பட்ட பொறியியல் கல்லூரிகளின் மாணவ சேர்க்கையில் சுமார் 60 ஆயிரம் சேர்க்கை இடங்கள் காலியாகவே இருந்தன. இதனால், இந்த ஆண்டில் புதிதாக பொறியியல் கல்லூரிகளைத் துவக்க அனுமதிக்க வேண்டாம் என்று தமிழக அரசு ஏஐசிடிஇ-யிடம் கேட்டுக் கொண்டது.
நீதிமன்றத்தின் பாதுகாப்பை பலப்படுத்தும் விதமாக, வழக்கறிஞர்கள் மற்றும் குறிப்பிட்ட நபர்கள் மட்டுமே நீதிமன்றத்திற்குள் செல்ல வேண்டும் என்ற விதி கடுமையாக்கப்பட்டதால், வழக்கறிஞராக பயிற்சி எடுக்கும் சட்ட மாணவர்கள், வழக்கு விசாரணைகளை நேரடியாக சென்று பார்த்து பயிற்சி பெறுவது பாதிக்கப்பட்டது.
இந்தியாவில் உள்ள அனைத்து மருத்துவக் கல்லூரிகளிலும் மாணவர்களை சேர்க்க பொது மருத்துவ நுழைவுத் தேர்வு நடத்துவது என்ற மத்திய அரசின் முடிவு, பல மாநிலங்களின் எதிர்ப்பு மற்றும் ஊழியர் பற்றாக்குறையினால் 2013-14ம் கல்வியாண்டிற்கு தள்ளிவைக்கப்பட்டது. இதற்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்தது. நுழைவு தேர்வு தள்ளிவைக்கப்பட்டதால் தமிழக மாணவர்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.
தமிழ்நாடு பணியாளர் தேர்வு வாரியத்தில் (டி.என்.பி.எஸ்.சி.) பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதாக வந்த புகாரை அடுத்து, பல அதிகாரிகளை சி.பி.ஐ. கைது செய்து விசாரணை நடத்தி வருகிறது. இதனால் டி.என்.பி.எஸ்.சி. சமீபத்தில் நடத்திய தேர்வுகளில் தேர்ச்சி பெற்றவர்களை நியமிப்பதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது.
சென்னையில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தை இடமாற்றம் செய்ய வேண்டும் என்ற தமிழக அரசின் திட்டத்தை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. நூலக இடமாற்றத்திற்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்தில் அனைத்து ஐஐடி மற்றும் தொழிற்கல்வி நிறுவனங்களுக்கும் பொதுவான ஒரே நுழைவுத் தேர்வை நடத்துவது என்ற சட்ட மசோதா தாக்கல் செய்ய மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் கபில் சிபல் முயற்சி மேற்கொண்டார்.
இந்த மசோதா மீதான விவாதத்தின்போது, சுற்றுச்சூழல் அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ், ஐஐடி மற்றும் ஐஐஎம்களில் பணியாற்றும் பேராசிரியர்களின் திறன் குறித்து கேள்வி எழுப்பினார். இதனால் நாடாளுமன்றத்தில் பெரும் அமளி ஏற்பட்டது.
ஜமையா மிலியா இஸ்லாமியா பல்கலைக்கு சிறுபான்மை கல்வி நிறுவனம் என்ற அங்கீகாரம் கிடைத்தது.
அனைவருக்கும் கல்வி சட்டம் நடைமுறைக்குக் கொண்டு வரும் திட்டம் உருவானது. இது குறித்து ஆலோசனை அளிக்க ஆணையம் ஒன்று உருவாக்கப்படுவதாக பிரதமர் அறிவித்தார்.
உயர்கல்வி மாணவர்களுக்கு உதவும் வகையில் தகவல் தொழில்நுட்பத் துறை, உலகிலேயே விலை குறைந்த கையடக்க கணினியை (ரூ.1,200) அறிமுகப்படுத்தியது. மாணவர்களுக்காகவே தயாரிக்கப்பட்ட இந்த கணினியின் உற்பத்தியை அதிகரிக்க அமைச்சர் கபில் சிபல் கேட்டுக் கொண்டார்.
ஐஐடிக்களின் கல்விக் கட்டணத்தை உயர்த்தி ஐஐடி கவுன்சில் அறிவித்தது. ஏழை மாணவர்கள் அல்லாதவர்களுக்கு 2013ம் கல்வியாண்டில் இருந்து ஒரு ஆண்டுக்கு ரூ.2 லட்சம் என கல்விக் கட்டணம் உயர்த்தப்பட்டது. உயர்த்தப்பட்ட இந்த கல்விக் கட்டணத்தை மாணவர்கள் படிக்கும் காலத்தில் செலுத்தாமல், படித்து முடித்து வேலை கிடைத்ததும் செலுத்தும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.
ஐஐடிக்கள், தங்கள் நுழைவுத் தேர்வு மதிப்பெண் குறித்து மாணவர்களுக்கு விளக்கம் அளித்தது. அதாது,ஒவ்வொரு பாடப்பிரிவிலும் தலா 10 சதவீத மதிப்பெண் பெற்று, மொத்தமாக 35 சதவீதத்திற்கு மேல் மதிப்பெண் பெறும் மாணவரே பொது ரேங்க் பட்டியலில் இடம்பெறுவார் என்று தெரிவித்துள்ளது.
மத்திய அரசு இந்தியா முழுவதும் தேசிய உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சி ஆணையங்களை (என்சிஎச்இஆர்)அமைத்து, அதன் மூலம் தனியார்-பொதுமக்கள் பங்களிப்புடன் 2,500 மாதிரிப் பள்ளிகளைத் துவக்க திட்டமிட்டது.
இந்தியாவில் தொழிற்கல்வி பயில மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் பாலிடெக்னிக் மற்றும் பொறியியல் கல்லூரிகளை துவக்கும் திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தது.
மேலாண்மைக் கல்வி நிறுவனங்களில் உயர் கல்வி பயிலும் மாணவர்களுக்கு காமன் மேனேஜ்மென்ட் அட்மிஷன் டெஸ்ட் (சிமேட்) தேர்வை ஏஐசிடிஇ அறிவித்தது. இதனால் பல்வேறு நுழைவுத் தேர்வுகளை எழுதுவதால் ஏற்படும், பணச் செலவு, மனக் கவலையில் இருந்து மாணவர்கள் விடுபட்டனர்.
2 comments:
புதிய பொலிவுடன் தளம் மிளிர வாழ்த்துக்கள்
தெரியாத பல விஷயங்களை தெரிந்து கொண்டேன். நன்றி சகோ
Post a Comment